சுமார் 6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தொகுதியொன்று, வான்வழித் தபால் பொதிகள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த இந்தப் போதைப்பொருட்கள், தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குஷ் (Kush), ஹஷீஷ் (Hashish), கொக்கைன் (Cocaine) மற்றும் எக்ஸ்டசி (Ecstasy) உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒன்பது தபால் பொதிகளில் அடைக்கப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
எனினும், குறித்த பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவரும் வருகை தராததால், அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, அந்த முகவரிகள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (28) பிற்பகல் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால் துறை அதிகாரிகள் முன்னிலையில் குறித்த பொதிகள் திறந்து பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதியை, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து போலி முகவரிகளைப் பயன்படுத்தி தபால் பொதிகள் ஊடாக அனுப்பப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.







