ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியும், குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இன்றியும் நபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தண்டனை வழங்குவதற்கு அனுமதிப்பது, சந்தேகநபர்கள் மீதான சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலம் தற்போதைய வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால், கடந்த காலங்களில் கடுமையான சட்டங்களின் கீழ் இடம்பெற்றதைப் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








