இலங்கையில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 6,000 பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்த நோயினால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் நாடு முழுவதும் மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதி மட்டங்களில் சுகாதார முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகளிர் நாடாளுமன்றக் குழுவின் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டு முதல் 35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையிலான விரிவான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பெண்களிடையே நோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.








