முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்தக் கிராமத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியமை மற்றும் அவரது பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றியமைக்காக விசேட சலுகை அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற மூன்று பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வுகளை இரத்து செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், தற்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக (SSP) பதவி வகித்த இருவர் உட்பட மூன்று அதிகாரிகளையும் மீண்டும் பிரதான பொலிஸ் பரிசோதகர் (CI) பதவிக்கு தரமிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதியற்ற முறையில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பதவி உயர்வுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அப்போதைய அமைச்சரவையின் தீர்மானங்களைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








