வாழைச்சேனையிலிருந்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தானை பகுதிக்கான புதிய பேருந்து சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை (01.11.2026) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியின் இணைப்பாளர் க. திலிப்குமார் இச்சேவையை ஆரம்பித்து வைத்தார்.
முதற்கட்டமாக வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் இப்பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பிரதேச மக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் வாரம் முழுவதும் இச்சேவையை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள முறுத்தானை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் நீண்டகாலமாகப் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். குறிப்பாக, குறித்த கிராமங்களுக்குப் பயணம் செய்வதற்கு முச்சக்கர வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்பட்டதுடன், இதற்காக அதிகளவு பணத்தையும் செலவிட வேண்டியிருந்தது.



இதனால், மருத்துவமனைகளுக்குச் செல்லுதல், பாடசாலைகளுக்குப் பயணித்தல், சந்தைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளுக்குச் செல்லுதல் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் தேசிய மக்கள் சக்தியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ம. தமிழ்ச்செல்வன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் க. திலிப்குமாரிடம் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடி இப்புதிய பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இச்சேவையின் மூலம் முறுத்தானை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது அன்றாடப் போக்குவரத்துத் தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமது நீண்டகாலப் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு புதிய பேருந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளர் க. திலிப்குமார் ஆகியோருக்குப் பிரதேச மக்கள் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்








