இலங்கையின் விவசாயத் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நெற்செய்கைக்கு மேலதிகமாக மேலும் 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் நெல் உள்ளிட்ட மொத்தம் 13 பயிர்ச்செய்கைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில், விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியத் தொகையை தற்போதைய அரசாங்கம் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியானது குறிப்பிட்ட தேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத பயிர்ச்செய்கை மானியம் எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவசாயிகள் தமக்குக் கிடைக்கும் மானியத் தொகையை உரம் கொள்வனவு செய்தல், பயிர்ச்சேதங்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்தல் மற்றும் விவசாய நிலங்களைப் பண்படுத்துதல் உள்ளிட்ட தமது விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், நெல் பயிரிடப்படும் நிலங்களில் மேலதிகமாக ஏனைய உணவுப் பயிர்களைச் செய்கை செய்யும் விவசாயிகளுக்கும், நெற்செய்கைக்கு வழங்கப்படும் அதே அளவிலான மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பல்வேறு உணவுப் பயிர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் நடைமுறையில் இல்லாத வகையில், விவசாயிகளுக்காக அதிகளவிலான நிதியை ஒதுக்கி, பயிர்ச்செய்கை மானியங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.







