மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய விவசாய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துமாறு கோரியும் பண்ணையாளர்களுக்கு நீதிகோரியும் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று (2) மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் நீண்டநேரமாக போராட்டம் நடாத்தியபோதிலும் அங்கு அரசாங்க அதிபர் வருகைதராத அதேநேரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்தும் அரசாங்க அதிபர் வருகைதராத நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.











மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அத்துமீறிய விவசாய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தும் இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்திருந்தன.
அதன் அடிப்படையில் இன்று காலை திராய்மடுவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தினை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பெருமளவான பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் குறித்த பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது பஸ்களில் போராட்டக்காரர்கள் வருகைதந்த நிலையில் சத்துருக்கொண்டான் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதந்த பஸ்கள் பொலிஸாரினால் மறிக்கப்பட்ட நிலையில் அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் பொலிஸாருடன் கடுமையாக வாக்குவாதங்களில் ஈடுபட்ட நிலையில் பின்னர் பஸ்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.எனினும் பஸ்கள் மீண்டும் சுவிஸ்கிராமத்தில் உள்ள ரயில்வே கடவைக்கு அருகிலும் பொலிஸாரினால் மறிக்கப்பட்டு மீண்டும் செல்வதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரியளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பு கோசங்களை எழுப்பினார்கள்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டு, பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன்போது மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“அரசே ஆக்கிரமிப்பாளர்களுக்கு சலுகைகாட்டாதே, பதவிக்காக பண்ணையாளர்களை குறிவைக்காதே, மட்டக்களப்பின் பாரம்பரிய நில உரிமையில் கைவைக்காதே, மயிலத்தமடு காவல்துறையே பண்ணையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து, அரச அதிகாரிகளே பண்ணையாளர்களின் கண்ணீருக்கு பதில் சொல், நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்து, எமது கால்நடைகளை சுட்டுக்கொல்லாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
நீண்ட நேரம் போராட்டம் நடைபெற்றதுடன் இதன்போது அரசாங்க அதிபரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் அதனை நிராகரித்த அரசாங்க அதிபர் ஐந்து பேரை வந்து அலுவலகத்தில் சந்திக்குமாறு கோரியிருந்தார்.
இதன்போது ஊடகங்களையும் அழைத்துச்செல்வதற்கான அனுமதியை போராட்டக்காரர்கள் கோரியபோதிலும் அதுவும் அரசாங்க அதிபரினால் நிராரிக்கப்பட்டு ஐந்து பேர் மட்டும் சந்திப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் இந்தபோராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்பதற்காக சென்ற நிலையில் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு செல்வதற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்க அதிபரை தொடர்புகொள்ளமுயற்சித்த நிலையில் அவரை தொடர்புகொள்ளமுடியாத நிலையிருந்ததாகவும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்க அதிபரின் செயற்பாட்டினை கண்டித்தும் இதன்போது கண்ட கோசங்களும் எழுப்பபப்பட்டன.

இதன்போது ஐந்து பேர் மாவட்ட அரசாங்க அதிபர் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,
அரசாங்க அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தது என்று கூற முடியாது என்றும், அரசாங்க அதிபர் தனக்குள்ள அதிகார எல்லைக்குள் நின்றே பேசினார். நிரந்தரமான தீர்வினைத் தன்னால் வழங்க முடியாது என்பதில் அரசாங்க அதிபர் தெளிவாக இருந்தார்.
எனினும், மாடுகளைச் சுடுவது, தேக்கு மரங்களை வெட்டி மின்சாரம் கொண்டு செல்வது, கடத்துவது மற்றும் தாக்குதல்கள் நடத்துவது போன்ற தற்காலிகப் பிரச்சினைகளை பொலிஸ், ஏ.எஸ்.பி, ஓ.ஐ.சி ஆகிய அதிகாரிகளைக் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான நபரைப் பார்க்கச் சென்ற 5-6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்குக் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதுடன், அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார். மகாவலி தொடர்பான வழக்கு டிசம்பர் மாதம் 9-ஆம் திகதி நீதிமன்றத்திற்கு வரவுள்ளதால், அன்றைய தினமே இதற்கான நிரந்தரத் தீர்வு குறித்து எதிர்பார்ப்பதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பேச்சுவார்த்தை முடிந்ததும் ஊடகங்கள் அனுமதிக்கப்படும் என்றும், தான் பேசிய விஷயங்களை ஊடகங்களுக்கு நேரில் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, போராட்டங்கள் நடத்துவதைத் தடுக்கும் வகையில் பொலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதில் இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஸ்ரீநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சரளா இம்மானுவேல், கண்டுமணி குகராசா, சபாரத்தினம் சிவயோகநாதன், எம். லூக் ஜான், சீனித்தம்பி தியாகராசா (நிமலன்), சட்டத்தரணி வைரமுத்து ஜெயசிங்கம் மற்றும் சந்திரசேகரம் மோகன் ஆகிய 11 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மகாவலி அதிகாரசபையினர் கால்நடை வளர்ப்பாளர்களுக்குப் பொருத்தமான வேறு ஒரு இடத்தை அடையாளம் காட்டி, அதை நேரில் சென்று காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் விவசாயிகள் பயிர் செய்யும் நிலங்களுக்குள் வேண்டுமென்றே மாடுகள் விடப்படுவதாக மகாவலி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அளிக்கப்படும் அறிவுறுத்தல்களையும் அழுத்தங்களையும் அத்துமீறி விவசாயம் செய்பவர்களுக்கு ஏன் வழங்குவதில்லை என ஆவேசமாகக் கேள்வி எழுப்பப்பட்டதுடன், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரையிலாவது அத்துமீறிய விவசாயத்தைப் பயிர் செய்ய விடாமல் தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டது.
ஆனால் அரச அதிகாரிகள் தரப்பில், அத்துமீறிய விவசாயிகள் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கவே கூறப்பட்டுள்ளதே தவிர நீதிமன்றத் தீர்ப்பில் அவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மயிலத்தமடு, மாதவனைப் பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்தால் ஏற்கனவே மேய்ச்சல் தரை வழங்குவது குறித்த தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் சிலர் அப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகவும், அதனால் கால்நடைகளை வைத்திருப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் விவசாயிகள் முறையிட்டிருந்தனர்.
இதன் விளைவாக மகாவலி அதிகார சபையினால் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான இறுதித் தீர்ப்பு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இதற்கிடையில், தங்களது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் பயிர்ச்செய்கை நடைபெறுவதால் மாடுகளை வைத்திருக்க இடமில்லை என்றும், இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினை குறித்து மகாவலி அதிகார சபை மற்றும் பொலிஸாருடன் நடத்தப்பட்ட தொடர் கலந்துரையாடல்களின் அடிப்படையில், தற்போது பயிர்ச்செய்கை நடைபெறாத ஏனைய பகுதிகளில், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தற்காலிகமாக மாடுகளை மேய்ப்பதற்கான இடங்களை அடையாளப்படுத்தித் தர மகாவலி அதிகார சபையும் வனவளத் திணைக்களமும் சம்மதித்துள்ளன.
இதற்காக அதிகாரிகள் நாளை அல்லது நாளை மறுதினம் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர். மேலும், விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே மோதல் நிலவுவதைத் தடுக்க பொலிஸாரின் பாதுகாப்பு கோரப்பட்ட நிலையில், கூடுதல் பொலிஸாரை நியமித்து பாதுகாப்பு அளிப்பதாக பொலிஸ் தரப்பு உறுதியளித்துள்ளது. பண்ணையாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக சில பொலிஸ் அதிகாரிகளை மாற்றவும், மொழிப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் மொழியில் தொடர்பாடல் செய்யக்கூடிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக எதிர்காலத்தில் இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.







