இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் புதிதாக 487 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.3 சதவீத அதிகரிப்பாகும்.
தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 249 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதேவேளை, இரண்டாவது காலாண்டில் ஆண் மற்றும் பெண் தொற்றாளர்களுக்கிடையிலான விகிதம் 7:1 ஆகப் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட 55 இளைஞர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 48 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்ளடங்குகின்றனர்.
மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எச்.ஐ.வி தொடர்பான 8 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதுவரை இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுடன் தொடர்புடைய மொத்தம் 820 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவிய 117 தொற்றுச் சம்பவங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இளம் வயதினரிடையே பதிவாகியுள்ள புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மொத்த தொற்றுப் பரவலில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் நாட்டில் எச்.ஐ.வி தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன.







