யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனையின்போது பெருமளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (02) இரவு பொலிஸார் வீதித் தடையமைத்து வாகனங்களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், தங்களிடம் இருந்த பொதியொன்றைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கைவிடப்பட்ட பொதியைச் சோதனையிட்ட பொலிஸார், அதற்குள் 14 சிறிய பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 கிலோ 340 கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிலோ 62 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 14 கிலோ 402 கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்காக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







