இலங்கையின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய ஆசன ஒதுக்கீட்டு அறிவிப்பின்படி, கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பதுளை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான முதன்மை வாக்காளர் பதிவேடு மற்றும் 2026 (1)ஆம் ஆண்டுக்கான துணை வாக்காளர் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 98(8) ஆவது உறுப்புரைக்கு அமைவாக இந்த ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான 2511/02 இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2026 ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேடுகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து தேர்தல் மாவட்டங்களுக்குமான நாடாளுமன்ற ஆசனங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.








