மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப்பகுதியைச் சுமார் 200 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், குறித்த காணியை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னே ஞானானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நீதிமன்றம் குறித்த மேய்ச்சல் நிலத்தை கால்நடைகளின் பயன்பாட்டுக்காக விடுவிக்குமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை தொடர்பாக நேற்று (02) வெளியிட்ட விசேட காணொளியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு மக்களின் பிரச்சினையைப் பரிகாசத்துக்கு உட்படுத்துவதாகவும் அவர் சாடியுள்ளார்.
தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் கோரிக்கையை அரசாங்கம் அலட்சியப்படுத்தக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு மேய்ச்சல் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.







