கலகொடத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த போராட்டத்தின்போது உரிய சட்ட அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியவர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா, குருந்துவத்தை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் சாகர தயாரத்ன முன்வைத்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் தங்கியுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அண்மையில் ஞானசார தேரரை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட ‘மஹாசோன் யாகய’ (Mahason Yagaya) நிகழ்வின்போதும் உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேலதிக நீதவான், சட்ட அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குருந்துவத்தை பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.







