பொதுமக்களுடன் கடமையாற்றும் போது தனிநபர்களைத் தகாத மற்றும் புண்படுத்தும் வார்த்தைகளால் திட்டும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எந்தவொரு நபரையும் தகாத வார்த்தைகளால் அழைக்கவோ அல்லது திட்டவோ பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகள் ஒழுக்கமற்றவை எனக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகளை முன்னெடுக்கப் பொலிஸார் ஒருபோதும் தயங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த உறவும் பரஸ்பர நம்பிக்கையும் நிலவுவது அவசியமாகும்.
எனினும், சில பொலிஸ் அதிகாரிகளின் முறையற்ற நடத்தைகள் காரணமாகப் பொலிஸ் திணைக்களத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களின் சுயமரியாதையைப் பாதுகாப்பதுடன், பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தையும் நிலைநாட்டும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.








