போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 208 பொலிஸ் அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு முறைகேடுகள் காரணமாக சுமார் 1,500 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் சட்டத்தரணியுமான எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்திற்குள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் தகுதியற்ற அதிகாரிகள் இன்னமும் இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அவ்வாறான அதிகாரிகளை அடையாளம் கண்டு திணைக்களத்திலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறிழைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (04) வரை 233 சிறுமிகள் உட்பட மொத்தம் 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களைச் சூழ போதைப்பொருள் விநியோகிக்கப்படுவது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஐஸ் எனப்படும் படிக மெத்தம்பெட்டமின் போதைப்பொருள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஐஸ்கிறீம், பஞ்சு மிட்டாய் மற்றும் சரவிட்டை போன்ற உணவுப் பொருட்கள் ஊடாக போதைப்பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்த தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளைக் கண்காணித்து போதைப்பொருள் விநியோகத்தைத் தடுப்பதற்காகப் புலனாய்வு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிள்ளைகளின் உணவுப் பழக்கம், நடத்தை, உரையாடல்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், இத்தகைய மாற்றங்கள் போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.








