நாட்டின் நெல் அறுவடைக்குப் பின்னரான செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு 500 மில்லியன் ரூபாய் செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக கூட்டுறவு ஆணையாளர்கள் மற்றும் பயனாளிகளான கூட்டுறவுச் சங்கங்களுக்கு விழிப்புணர்வூட்டும் விசேட கருத்தரங்கு இன்று (06) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், திட்டத்தின் நோக்கம் மற்றும் இயந்திரங்களைப் பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
அமைச்சின் தகவலின்படி, வழங்கப்படவுள்ள ஒவ்வொரு நவீன நெல் உலர்த்தும் இயந்திரமும் நாளொன்றுக்கு சுமார் 20 மெற்றிக் தொன் நெல்லை உலர்த்தும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த இயந்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக, சிறந்த செயற்பாட்டுத் திறனையும் நிலையான வளர்ச்சியையும் கொண்ட கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான முறையான அறிக்கைகள் பெறப்பட்ட பின்னரே தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக நெல்லை உலர்த்துவதற்கான வசதிகளை மேம்படுத்தி, அறுவடைக்குப் பின்னரான இழப்புகளைக் குறைப்பதுடன் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டுத் திறனையும் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.







