யாழ்ப்பாணம் பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ரயில் கடவைக்கு இதுவரை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்படாதமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
குறித்த ரயில் கடவைக்கு பாதுகாப்பு சமிக்ஞை விளக்குகளை விரைவாகப் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு மாகாண மக்கள் பாண், பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதன் ஊடாக அரசாங்கத்திற்கு பெருமளவு வரி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு கோடிக்கணக்கில் வரி செலுத்தும் மக்களுக்கு அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்குக்கூட கோரிக்கை விடுத்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பிரௌண்ட் வீதி முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துமாறு அமைச்சர் சந்திரசேகரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த ரயில் கடவைக்கு சமிக்ஞை விளக்குகளை உடனடியாகப் பொருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.







