மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் மௌனம் காப்பது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை (06) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 139,110 வாக்குகளைப் பெற்றிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள அரியநேத்திரன், மட்டக்களப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற அவர், தற்போது அதே மக்களின் முக்கிய பிரச்சினையான மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடாமல் இருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி கல்லடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்து, மயிலத்தமடு – மாதவனை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார் எனவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றத்தின் ஊடாக இந்த விவகாரத்தை எழுப்பி, மேய்ச்சல் தரை அத்துமீறல்கள் தொடர்பில் உரிய கவனத்தை ஈர்த்திருக்க முடியும் எனவும் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் தொடர்பான விடயங்களில் கருத்து வெளியிடும் எதிர்க்கட்சித் தலைவர், மட்டக்களப்பு பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து பேசாமல் இருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் பண்ணையாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனுடன் தொடர்புடைய நீதிமன்ற வழக்குகள், கால்நடைகள் கொல்லப்படுதல் மற்றும் பண்ணையாளர்கள் கடத்தப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஸ்ரீநேசன் மற்றும் இ. ஸ்ரீநாத் ஆகியோர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர், மயிலத்தமடு – மாதவனை விவகாரம் தொடர்பில் அந்தச் சந்திப்புகளில் பேசுகின்றாரா என்ற சந்தேகத்தையும் அரியநேத்திரன் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குரல் கொடுக்க முடியாத தமிழ் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று சந்திப்புகளை நடத்துவதன் பயன் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே அரியநேத்திரனின் கோரிக்கையாக அமைந்துள்ளது.







