கனடாவில் தற்காலிகமாக வசித்து வரும் சுமார் 2 இலட்சம் வெளிநாட்டினருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency – PR) வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கனடாவின் குடியேற்றக் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக, ஒருமுறை சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளதுடன், பல ஆண்டுகளாக அந்நாட்டில் வசித்து வரும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தங்கியுள்ள உக்ரைனியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் இதன் மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் இரண்டு முக்கியப் பிரிவுகளாகச் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் 100,000 வரையான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கப்படவுள்ளது. மாகாணங்களின் தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப தகுதியானவர்களைத் தெரிவுசெய்ய மாகாண அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயற்படும்.
மற்றைய 100,000 இடங்கள் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் உக்ரைன் குடும்ப மீளிணைப்பு மற்றும் ஹொங்கொங் நிரந்தர வதிவிடத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினர் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதேவேளை, கனடாவின் குடியேற்ற முறையைச் சீரமைத்து, வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தத் திட்டம் கனடாவில் வசிக்கும் அனைத்து தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கும் தானாகவே நிரந்தரக் குடியுரிமை வழங்கும் திட்டமல்ல. குறிப்பிட்ட தகுதிகளையும் குடியேற்றப் பாதைகளையும் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.








