கிழக்கின் தென்கோடியில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி விரத உற்சவம் வழமையான உற்சவ நிகழ்வுகளின்றி மட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடைபெறவுள்ளதாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கந்தசஷ்டி விரத காலத்தில், பாலஸ்தாபனம் இடம்பெற்றுள்ள காரணத்தினால் வசந்த மண்டப விசேட பூஜை, வீதியுலா, அலங்கார உற்சவம், சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் மற்றும் பிராயச்சித்த பூஜை ஆகியன இம்முறை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா அறிவித்திருந்த நிலையில், மேலதிக விளக்கமளித்த பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள், விரத நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கந்தசஷ்டி புராணப் படலம் பாடப்படுவதுடன், கும்பம் மற்றும் யாகம் இன்றி படிக்கட்டு அபிஷேக பூஜை மாத்திரம் நடைபெறும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், விரத காலத்தில் சங்கல்பம் இருந்து விரதம் அனுஷ்டிக்க விரும்பும் அடியவர்கள் உரிய நேரத்திற்கு முன்னதாக ஆலயத்திற்கு வருகைதந்து தர்ப்பை பெற்றுக்கொண்டு விரதத்தில் பங்கேற்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.








