அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், அணு உலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு ஈரான் அதிகாரிகள் அயோடின் மாத்திரைகளை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக, அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷேர் (Bushehr) உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை இலக்காகக் கொண்டு இந்த விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கதிரியக்க அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து தைராய்டு சுரப்பியைப் பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அயோடின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்க நிர்வாகம் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து விடுக்கப்படக்கூடிய இராணுவ அச்சுறுத்தல்கள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அமெரிக்கா எந்தவொரு தாக்குதலையும் முன்னெடுத்தால் அதற்குப் பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான இராணுவப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.







