பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அரச சேவையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சுகள், திணைக்களங்கள், மாகாண சபைகள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் அன்றாட நிர்வாக மற்றும் உள்ளகப் பணிகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அரச நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஒன்பது மாகாணங்களையும், மத்திய அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதனைவிடத் தீவிரமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







