இலங்கை பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவின் பெயரைப் பயன்படுத்தி, வேகக்கட்டுப்பாட்டை மீறிய குற்றத்திற்கான அபராதத்தைச் செலுத்துமாறு கோரி போலியான குறுஞ்செய்திகள் பரவி வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“GovPay” பெயரில் SMS மற்றும் iMessage ஊடாக அனுப்பப்படும் இக்குறுஞ்செய்திகளுடன் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகள் போலியானவை என அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடியின் ஒரு பகுதியாகவே இவை அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு கோரி டிஜிட்டல் பொருளாதார அமைச்சோ அல்லது வேறு எந்தவொரு அரச நிறுவனமோ உத்தியோகபூர்வ GovPay தளத்தின் ஊடாக இவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்புவதில்லை எனவும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான நடைமுறைகளின் ஊடாகவே GovPay கட்டண முறைமை செயற்படுவதாகவும், lygov.art போன்ற சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்கள் ஊடாகப் பணம் செலுத்துமாறு கோரப்படுவது மோசடியின் ஓர் அங்கம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, அவற்றில் உள்ள இணைய இணைப்புகளைத் திறக்கவோ வேண்டாம் எனப் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வாறான இணைப்புகள் ஊடாகத் தமது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்கள் மற்றும் கடவுச்சொற்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும், இணையவழி மோசடிகளில் சிக்காமல் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.







