நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிப்பதற்காக, தாம் உள்ளிட்ட 10 பிக்குகள் அடங்கிய குழுவொன்று சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அவர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
ஞானசார தேரருக்கு காவி உடை அணிவிக்கும் நிகழ்வை பௌத்த தர்மம் மற்றும் சமய விதிமுறைகளுக்கு அமைய நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து, அதற்குப் பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை அறிவிக்குமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதியொன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, பிக்குகளை காவி உடையுடனேயே நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








