நாட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (11) திறந்து விடப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்திலிருந்து மேலதிக நீர் அவ்வப்போது வெளியேற்றப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவத்துறை, உலப்பனை, கம்பளை, கெலிஓயா மற்றும் பேராதனை உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர் சத்துர அரும்பொல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த டிட்வா புயலின்போது நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றம் காரணமாக கம்பளை, கெலிஓயா மற்றும் பேராதனை உள்ளிட்ட பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
இவ்வாறான அனர்த்தங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தற்போதைய மழை நிலைமையைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் வசிக்கும் மக்கள் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.







