முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2008ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய விமான சேவை நிறுவனத்தின் தொடர்ச்சியான நிதி நெருக்கடி குறித்து இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமையைக் குறைத்து, அதன் நிதி நிலைமையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய அமைச்சரவையினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி, அவர்களின் பணவனுப்பல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.







