சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிவராசா அனோஜனை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்கு தலையீடு செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அனோஜனின் குடும்பத்தினருடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகள் உட்பட அனைத்து இலங்கையர்களுக்காகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுப்பது தமது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இவ்விடயத்தில் சாதி, மதம், அரசியல் கட்சி மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து தலையீடு செய்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தமது மகன் தற்போது சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமது மகனை மரண தண்டனையிலிருந்து விடுவித்து, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆரம்பம் முதலே நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோருக்கும் அனோஜனின் தாயார் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வாத் தலைமையிலான தூதரக அதிகாரிகள், அங்கு சென்று சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் மற்றும் உதவிகளை வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் அவர் தனது நன்றியைப் பதிவு செய்துள்ளார்.
இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த், ஜனாதிபதியை முதன்முதலில் சந்தித்தபோது வழங்கிய உறுதிமொழிக்கு அமைய அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், இதே காலப்பகுதியில் பங்களாதேஷைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம், அனோஜனின் பெற்றோருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.







