கொழும்பில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் கூறப்படும் முதியவர் ஒருவருக்கு, குறித்த பெண் தக்க பதிலடி கொடுத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கல்கிசையிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகம் நோக்கிப் பயணித்த பேருந்தில், வெள்ளவத்தை பகுதியில் ஏறிய முதியவர் ஒருவர், பயணிகள் நெரிசலைப் பயன்படுத்தி இளம் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை ஆரம்பத்தில் பொறுத்துக்கொண்ட பெண், பம்பலப்பிட்டி பகுதியை அண்மித்தபோது குறித்த நபரை எச்சரித்துள்ளார். எனினும், அவர் மீண்டும் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண், பேருந்தில் இருந்த ஏனைய பயணிகளுக்கும் கேட்கும் வகையில் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் பேருந்து நிறுத்தப்பட்டபோது குறித்த முதியவரின் முகத்தில் இரண்டு முறை அறைந்துவிட்டு, எச்சில் துப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏனைய பயணிகளும் முதியவரின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பேருந்து நடத்துனரும் அவரைக் கண்டித்து பேருந்திலிருந்து இறக்கியதாகக் கூறப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவம், சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.







