அனுராதபுரம் புனித நகரில் இடம்பெற்ற போராட்டத்தைத் திட்டமிட்டு கலைத்த அரசாங்கம், அப்பகுதியில் இரண்டு இந்து ஆலயங்களை அமைப்பதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
அனுராதபுரம் புனித நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு அரசாங்க ஆதரவாளர்களும் காவல்துறையினரும் இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தமை திட்டமிட்ட நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தினால் கூடத் தடுக்க முடியாத அந்தப் போராட்டத்தை அரசாங்கத் தரப்பினர் சதித்திட்டம் தீட்டி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அனுராதபுரம் புனித பூமி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
மேலும், புதிய வர்த்தமானி அறிவித்தலில் பௌத்த புனித பூமி என்ற அடையாளம் நீக்கப்பட்டுள்ளதாகவும், இராமர் ஆலயம் அமைப்பது தொடர்பான திட்ட அறிக்கையொன்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அப்பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள இரண்டு இந்து ஆலயங்களில் ஒன்றை இராமர் ஆலயமாக மாற்றுவது அல்லது தனியார் காணியொன்றில் புதிதாக இராமர் ஆலயத்தை அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.







