இலங்கையின் தெற்குப் பகுதியிலுள்ள ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, பெருமளவு போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் நீண்டநாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
‘யசிரு புதா’ எனும் குறித்த மீன்பிடிப் படகு மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
படகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 50 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் 52 ஹெரோயின் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையிலேயே இந்தப் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற குறித்த படகில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கடந்த நவம்பர் 11ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது படகு கைப்பற்றப்பட்டதுடன், அதிலிருந்த ஐந்து சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை மற்றும் பெறுமதியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.







