மக்கள் மீதான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் வெடித்துச் சிதறும் நாள் வெகுதொலைவில் இல்லை என மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
அநீதிகளையும் சமூகப் பிரச்சினைகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கும் நிலையில் இலங்கைச் சமூகம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சமூகக் கொந்தளிப்புகள் மக்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் சோசலிசப் போராட்டமாக உருவெடுக்க வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், ‘உயிரைப் பணயம் வைத்து போராடிய தலைமுறையினரின் கனவு சோசலிசம்’ என்ற தொனிப்பொருளில் 37ஆவது நவம்பர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் யக்கல நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1988–1989 காலப்பகுதியில் போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் முதலாளித்துவத்தின் தோல்வியை உணர்ந்து, சோசலிசக் கொள்கைக்காகத் தமது தனிப்பட்ட விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் துறந்து மக்கள் விடுதலை முன்னணியின் முழுநேர உறுப்பினர்களாகச் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தக் காலப்பகுதியில் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் தமது அரசியல் இலட்சியங்களைக் கைவிடாத போராளிகளின் தியாகங்களை 37 ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
தமது இளமைக்காலக் கனவுகளையும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஒதுக்கிவைத்து மக்களின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்த அந்தத் தலைமுறையினரின் அரசியல் உறுதியையும் தியாக உணர்வையும் இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது வரலாற்றுக் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
சோசலிசம் காலாவதியாகிவிட்டதாகச் சிலர் கூறுகின்ற போதிலும், சோசலிசச் சிந்தனை மீண்டும் உலகளவில் துளிர்விட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், முதலாளித்துவத்தின் கீழ் உலகம் எதிர்கொள்ளும் போர், வேலையின்மை, இளைஞர்களின் விரக்தி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், காசா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்த லஹிரு வீரசேகர, மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் நவம்பர் வீரர்களை நினைவுகூர்ந்தாலும், நடைமுறையில் பெரும் வர்த்தகர்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பெரும் வர்த்தகர்கள் பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றமை தொடர்பிலும் கேள்வி எழுப்பிய அவர், சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் என்ன எனவும் வினவினார்.
1988–1989 காலப்பகுதியில் போராட்டங்களை முன்னெடுத்த தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி, தற்போது பெரும் செல்வந்தர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
அத்துடன், மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்படாது என அரசாங்கம் கருதுவதன் காரணமாகவே எதேச்சாதிகாரமான முறையில் செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
காவந்திஸ்ஸ யானை கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து சமூகத்தில் எதிர்ப்புகள் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இவை எதிர்காலப் போராட்டங்களுக்கான அறிகுறிகள் எனவும் தெரிவித்தார்.
இறுதியாக, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய மக்கள் எழுச்சியை சாதாரண எதிர்ப்புப் போராட்டமாக மட்டுப்படுத்தாமல், மக்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் சோசலிசப் போராட்டமாக மாற்ற வேண்டும் என்றும் லஹிரு வீரசேகர தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.







