ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு காண்பதுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நிறுவனத்தைச் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் சமர்ப்பிக்குமாறு துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் கடன் சுமை, விமானப் பயணத் தாமதங்கள், விமானங்களின் பற்றாக்குறை மற்றும் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள நிறுவனத்தின் விமானத் தொகுதி போதுமானதாக இல்லாததுடன், அவற்றின் சராசரி வயது சுமார் 12 வருடங்களாக இருப்பதால் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பயணத் தாமதங்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கொள்வனவு நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அமைச்சு மட்டத்தில் தனியான பிரிவொன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதமளவில் ஒரு குறுகிய உடற்பகுதியைக் கொண்ட விமானத்தையும், இரண்டு அகன்ற உடற்பகுதியைக் கொண்ட விமானங்களையும் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2029ஆம் ஆண்டளவில் விமானங்களின் எண்ணிக்கையை குறைந்தது 29 ஆக அதிகரிப்பது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பழைய வங்கிக் கடன்கள் மற்றும் பிணைமுறிக் கடன்கள் உள்ளிட்ட நிதிச் சுமைகளைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளையும் திறைசேரி முன்னெடுத்து வருகின்றது.
நிறுவனத்தை நிதி ரீதியாக மீட்டெடுத்து வினைத்திறனான சேவையை உறுதிப்படுத்துவதற்கான மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவும் தற்போது ஆராய்ந்து வருகின்றது.








