இலங்கை பொலிஸாருக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சீருடை, கனடா பொலிஸார் அணியும் சீருடையைப் போன்ற சாம்பல் நிறச் சட்டை மற்றும் நீல நிறக் காற்சட்டையைக் கொண்டதாக அமையலாம் என தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள குறித்த செய்தியில், 2027 ஜூன் மாதம் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சீருடைக்கான பரிசீலனையில் இந்த வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தபோது, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையிலும் இந்தச் சீருடை வடிவமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சீருடையை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய காக்கி நிறச் சீருடை, இலங்கையின் வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாக இல்லை என்றும், அதன் கனமான துணியினால் பொலிஸார் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.







