பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், முட்டையின் விலையும் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அநுரசிறி மாரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி உயர்ந்துள்ளமை ஆகியன இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, அண்மைக்காலத்தில் பெய்த அதிக மழை காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றங்களினால் முட்டையிடும் கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னர் 80 சதவீதமாகக் காணப்பட்ட உற்பத்தி, தற்போது 50 முதல் 60 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கோழித் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளும் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக முட்டை உற்பத்திக்கான செலவுகள் மேலும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் பேக்கரி துறைக்கான முட்டைகளின் தேவையும் அதிகரித்துள்ளதுடன், சந்தையில் முட்டைக்கான கேள்வி மேலும் உயர்ந்துள்ளது.
எனினும், தற்போதைய விலை அதிகரிப்பு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல எனவும், சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் வழங்கலுக்கு இடையிலான மாற்றங்களின் அடிப்படையிலேயே முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அநுரசிறி மாரிசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலைமை தொடருமானால் முட்டையின் விலை அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலும் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.








