லாஃப்ஸ் (LAUGFS) நிறுவனம் தனது வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 745 ரூபாவால் குறைக்கப்பட்டு, 6,740 ரூபாவிலிருந்து 5,995 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையும் 322 ரூபாவால் குறைக்கப்பட்டு, 2,720 ரூபாவிலிருந்து 2,398 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைகள் இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு இறக்குமதிச் செலவுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்திருந்த போதிலும், கடந்த மூன்று மாதங்களாக விலை உயர்வைத் தவிர்த்து வந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இதற்கு எதிராக நுகர்வோர் மத்தியில் அதிருப்தி எழுந்ததையடுத்து, விலை அதிகரிப்பு குறித்து விளக்கமளிக்க லாஃப்ஸ் நிறுவன அதிகாரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை அழைத்திருந்தது.
நேற்று (16) நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விலைகளைக் குறைப்பது குறித்து ஆராய்வதாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை எடுத்த தீர்மானத்துக்கு அமைய தற்போது எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.








