மட்டக்களப்பு மாமாங்கம், அமிர்தகழி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வரும் குரங்கு ஒன்றைப் பிடிப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குரங்கு, கடந்த சில தினங்களாக மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கு வருகைதரும் பக்தர்களைத் தாக்கி வந்துள்ளது. இதுவரை ஆலயத்திற்கு வருகைதந்த 8க்கும் மேற்பட்டோர் குறித்த குரங்கின் கடிக்கு இலக்காகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாமாங்கம், அமிர்தகழி, பார் வீதி மற்றும் சீலாமுனை ஆகிய பகுதிகளிலும் குறித்த குரங்கு அட்டகாசம் செய்து வருவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குரங்கினைப் பிடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நேற்று (17) பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக, பார் வீதியில் குரங்கினைப் பிடிக்க முற்பட்டபோது, அதனால் ஏற்பட்ட அச்சம் மற்றும் குழப்பம் காரணமாக விபத்தொன்றும் இடம்பெற்றதுடன், இருவர் குரங்கின் கடிக்கு இலக்காகியுள்ளனர்.









இதன்போது குரங்கினை வாகனத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சித்த நிலையில், வாகனத்தில் ஏறிய குரங்கு அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
தொடர்ந்து இன்றும் (18) குரங்கினைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இதனால் மாமாங்கேஸ்வரர் ஆலயச் சூழல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குரங்கினைப் பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








