மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக குவைத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தளத்தை இலக்குவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்தது.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீதும், மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தியது.
மேலும், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதுடன், அப்பகுதியில் பயணித்த எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் அதிகரித்தது.
இதனிடையே, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மோதல்கள் ஓரளவு தணிந்திருந்தன.
எனினும், கடந்த ஜூலை மாத இறுதி முதல் செப்டம்பர் மாத ஆரம்பம் வரையிலான காலப்பகுதியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலடியாக ஈரானும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்துத் தாக்குதல்களை நடத்தியது.
இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி ஈரானின் குவாஷ்ம் (Qeshm) தீவில் அமைந்துள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை இலக்குவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்குவைத்து ஈரான் கடந்த 13, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பஹ்ரைனின் ரிபா நகரிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் ரேடார் கட்டமைப்பு மற்றும் ஷேக் இசா விமானப்படைத் தளத்திலுள்ள ரேடார் அமைப்பு ஆகியவற்றை இலக்குவைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஈரானின் தாக்குதல்களை பஹ்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா மீண்டும் ஈரானின் குவாஷ்ம் தீவிலுள்ள இராணுவக் கட்டமைப்புகளை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, குவைத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தளமொன்றை இலக்குவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ட்ரோனை குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.







