நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமி மற்றும் குழந்தையின் நலன், கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், ‘அர்த்த’ (Artha) திட்டத்தின் கீழ் மாதாந்த நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவர்களின் நலத்தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், அவர்களின் கல்வி மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
15 வயதுடைய சிறுமி தற்போது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் (O/L) தோற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளார். இதனைக் கருத்திற்கொண்டு, பரீட்சைக்குத் தயாராகும் சிறுமிக்கு உளவியல் மற்றும் சமூக ஆலோசனை உதவிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சிறுமி கட்டாயக் கல்வி வயதை நிறைவுசெய்யும் வரையிலும் அல்லது அவரது விருப்பத்திற்கு அமைய உயர்கல்வி அல்லது தொழிற்பயிற்சியைத் தொடரும் வரையிலும் மாதாந்த நிதியுதவி வழங்கப்படும்.

அதேவேளை, இளைய குழந்தையின் போஷாக்கு மற்றும் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அர்த்த’ திட்டம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்படுகிறது.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் அல்லது மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் வீதிகளில் வாழும் சிறுவர்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது சுமார் 9,000 சிறுவர்கள் மாதாந்தம் இத்திட்டத்தின் பயன்களைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை அடுத்த ஆண்டும் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







