மலையகத் தமிழ் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்திய பின்னரே பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மலையக மக்களின் நலனுக்காகப் போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாத நிலையில், பெருந்தோட்டத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 13,000 மில்லியன் ரூபாவை மக்களுக்காக ஒதுக்கியதாகக் கூறுவது தவறானது எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சம்பள நிர்ணய சபையின் ஊடாகத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் மூலம் 200 ரூபா சம்பள அதிகரிப்பு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
கடந்த முறை நல்லெண்ண அடிப்படையில் இரண்டாம் நிலை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த போதிலும், இம்முறை அவ்வாறான ஆதரவை வழங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஒவ்வொரு மலையகக் குடும்பத்திற்கும் 20 பேர்ச் குடியிருப்புக் காணி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், திருமணமான ஒவ்வொரு தம்பதியினரும் தனிக் குடும்பமாகக் கருதப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தோட்டப் பகுதிகளில் பயிரிடப்படாமல் காணப்படும் தரிசு நிலங்களை இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாக முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் புதிய குத்தகை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட மனோ கணேசன், மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்துவதே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுதியான நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.
இறுதியாக, மலையக மக்களின் உரிமைகளைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுவோருக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.







