இலங்கையில் சுமார் 40,000 வைத்தியர் அல்லாத நபர்கள் மருந்துகளை விநியோகித்து வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது பொதுச் சுகாதாரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஃபெர்டினாண்டு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) அதிகப்படியான பயன்பாட்டினால் கிருமிகள் மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையைப் பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதியற்ற நபர்கள் மருந்தகங்களில் பணியாற்றி மருந்துகளை வழங்குவதும், நோயாளிகள் மற்றும் சில வைத்தியர்கள் நுண்ணுயிர் கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதும் இதற்கான முக்கிய காரணங்களாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பல நோய்களைக் குணப்படுத்துவதற்கு மருந்துகள் பயனற்றுப் போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.







