மட்டக்களப்பு, பாசிக்குடாவில் இயங்கி வரும் உடற்பிடிப்பு (SPA) நிலையத்திற்கு கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் அனுமதி வழங்கியமைக்கு எதிராக, பிரதேச சபை உறுப்பினர் தனபால் நிர்மலன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலை 3.00 மணியளவில் வாழைச்சேனை கறுவாக்கேணியில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரான தனபால் நிர்மலன், குறித்த SPA நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்த விவகாரம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு குறித்த SPA நிலையத்திற்குச் சென்ற பொலிஸார், மூன்று பெண்கள் மற்றும் ஓர் ஆண் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, குறித்த நிலையத்திற்கு பாசிக்குடா வட்டார பிரதேச சபை உறுப்பினர் வெற்றிவேல் பிறைசூடியின் சகோதரரான வெற்றிவேல் மோகன்ராஜ் நேரடியாகச் சென்று குழப்பத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் பிரதேச மக்களிடையே பேசுபொருளாகியுள்ள நிலையில், SPA நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் தவிசாளரின் நடவடிக்கையை விமர்சித்து தனபால் நிர்மலன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.








