மட்டக்களப்பு, அம்பிளாந்துறை பகுதியில் விசா காலம் முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த மலேசியப் பெண் ஒருவரைக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் நேற்று புதன்கிழமை (18) இரவு 8.30 மணியளவில் அம்பிளாந்துறை பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாகக் கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டுச் சோதனையிட்டுள்ளனர்.
விசாரணைகளின்படி, குறித்த பெண் கடந்த 2026 மே 10ஆம் திகதி சுற்றுலா விசாவில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது, அம்பிளாந்துறை பகுதியில் உள்ள நண்பர்களின் வீட்டில் தங்கியிருந்த அவர், தவறி விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது விசா காலம் கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. உடல்நலப் பாதிப்பு காரணமாக உரிய காலத்தில் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில், விசா காலம் முடிவடைந்தமை தொடர்பில் அவர் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







