மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் (Appointment) முறையின் கீழ் மாத்திரமே வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் வசதியைக் கருத்திற்கொண்டு இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2026 நவம்பர் 23ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்தத் திட்டத்தின் கீழ், தினசரி வழங்கப்படும் முன்பதிவு வாய்ப்புகளின் எண்ணிக்கை முன்னைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிகளவிலான பொதுமக்கள் தமது சேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் பின்வரும் இரண்டு வழிகளில் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.
- தொலைபேசி மூலம்: 011 2 117 116
- இணையத்தளம் மூலம்: https://dmtappointments.dmt.gov.lk
இதற்கமைய, நவம்பர் 23ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்த்து, முன்பதிவு செய்த நேரத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் நேரத்தைச் சேமித்து, சேவைகளை மேலும் வினைத்திறனுடன் வழங்கும் நோக்கிலேயே இந்தப் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







