நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நேர்முகத் தேர்வுகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (20) அனைத்து மாகாணங்களிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நேர்முகத் தேர்வுகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எனினும், நவம்பர் 21ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள ஏனைய நேர்முகத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி இடம்பெறும் என அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய திகதிகள் மாகாண அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 26ஆம் திகதியும், வடக்கு, தென், கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 28ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
மேலும், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நவம்பர் 29ஆம் திகதியும், மத்திய மாகாணத்திற்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலைகளுக்கான விருப்பத் தெரிவுகளைப் பதிவு செய்வதற்கான ஒன்லைன் முறைமை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ‘Teacher Recruitment Application System’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முறைமையில் விண்ணப்பதாரர்கள் தமக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் நாளன்று இரவு 8 மணி வரை தகவல்களைப் பதிவேற்ற முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நாள் வரை அழைப்புக் கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள், 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெற்றுள்ள பக்கத்தின் பிரதியையும், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடைபெறும் வளாகத்திலுள்ள காத்திருப்பு அறைக்கு வருகை தர வேண்டும்.
அங்கு காலை 8 மணி முதல் ஒன்லைன் முறைமைக்குள் பிரவேசிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்லைன் முறைமையில் தகவல்களைப் பதிவு செய்துகொண்டே நேர்முகத் தேர்வு மற்றும் செயல்முறைத் தேர்விலும் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியும். தேர்வுகள் நிறைவடைந்த பின்னரும் அன்றைய தினம் இரவு 8 மணி வரை பாடசாலை விருப்பத் தெரிவு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து பிரதியெடுத்து கையளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திகதி மாற்றத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு கல்வி அமைச்சு தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.







