தென் அமெரிக்க நாடான பெருவின் மத்திய ஆண்டீஸ் மலைப்பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று (20) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, உள்ளூர் நேரப்படி இரவு 7.09 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜூனின் நகருக்கு வடக்கே சுமார் 34 கிலோமீற்றர் தொலைவில், பூமிக்கு அடியில் 108 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ பதிவாகவில்லை.
எனினும், தலைநகர் லிமாவிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள சுமார் 40,000 கிலோமீற்றர் நீளமான எரிமலை மற்றும் புவித்தட்டுச் செயற்பாடுகள் நிறைந்த ‘நெருப்பு வளையம்’ (Ring of Fire) பகுதியில் பெரு அமைந்துள்ளது. உலகளாவிய நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன.
இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் பெருவின் ஆண்டீஸ் பகுதியில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருவர் காயமடைந்ததுடன், வீடுகள், சுகாதார நிலையங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்திருந்தன.
அத்துடன், கடந்த ஜூலை மாதம் ஜூனின் பிராந்தியத்தில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








