ருமேனியாவின் இல்ஃபோவ் கவுன்டியில் உள்ள கணேசா பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கணேசா பகுதியில் உள்ள ஸ்டெஃபான் செல் மாரே வீதிக்கு அருகில் கழிவுநீர் கட்டமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.
வீதியோரத்தில் சுமார் ஆறு மீற்றர் ஆழமான குழியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென மண் மேடு சரிந்து இருவரும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சுமார் ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் முதல் தொழிலாளியை உயிருடன் மீட்டுள்ளனர். அவர் சுயநினைவுடன் காயங்களின்றி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மற்றைய தொழிலாளியை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில், 11 மணி நேரத்திற்கும் மேலான தேடுதலின் பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







