தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று (21) சனிக்கிழமை மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கார்த்திகைப் பூ பொதுச் சின்னம் பொறிக்கப்பட்ட புகைப்படத்திற்கு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளரும் போதகருமான எஸ். லூக் ஜோன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமரராஜா, கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மகிழடித்தீவு சந்தியிலிருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கார்த்திகைப் பூ பொதுச் சின்னம் பொறிக்கப்பட்ட புகைப்படத்தை ஏந்தியவாறு, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கலாசார மண்டபத்தைச் சென்றடைந்தனர்.
தொடர்ந்து அங்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க தமது பிள்ளைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தியமை நிகழ்வில் கலந்துகொண்டவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
















