தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தைச் சீர்குலைக்கும் நோக்கில், ஊழல்வாத அரசியல்வாதிகளுடன் இணைந்து சில தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், இப்போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை திங்கட்கிழமை (23) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்புத் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து உருவான அரசாங்கம் எனவும், நாட்டை ஒழுங்கான பொருளாதார வளர்ச்சியுடனும் அபிவிருத்தியுடனும் கூடிய வளமான நாடாக மாற்றும் தேசியக் கொள்கையின் அடிப்படையில் பயணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தொடர்ந்து, தற்போது 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை ஒரே வருடத்தில் நிறைவேற்றுவதற்குப் பதிலாக 2027, 2028 மற்றும் 2029ஆம் ஆண்டுகளில் படிப்படியாகச் செயற்படுத்தும் வகையில் நிதித் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரச வருமானம் மற்றும் வரி வருமானம் அதிகரித்து வருவதுடன், ஊழல் மற்றும் மோசடிகளற்ற நிர்வாக முறையின் ஊடாக பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளைக் கவருதல் மற்றும் நாட்டின் வருமானத்தை உயர்த்தக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சில தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள உயர்வுகள் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளதுடன், 2027ஆம் ஆண்டிலும் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்துக் கொடுப்பனவு 300 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களின் நலன், வாழ்க்கைச் செலவு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களைச் சமநிலைப்படுத்தியே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தொடரும் யுத்த நிலைமையால் சர்வதேச ரீதியில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் மானியங்களை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினரும் சில தொழிற்சங்கங்களும் முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளால் மக்களைக் குழப்ப முடியாது எனவும், மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்த கந்தசாமி பிரபு, நாட்டை அபிவிருத்தியடைந்த வளமான நாடாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுபேறுகளை விரைவில் மக்கள் நேரடியாகக் காணக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.







