உலகில் அதிகளவான தேசிய பொது விடுமுறை தினங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, 2026ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 25 தேசிய பொது விடுமுறை தினங்கள் காணப்படுகின்றன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 190 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில், ஒரு நாட்டிற்கான பொது விடுமுறை தினங்களின் உலகளாவிய சராசரி 13 நாட்களாகப் பதிவாகியுள்ளது.
இந்தப் பட்டியலில் 30 பொது விடுமுறை தினங்களுடன் மியன்மார் முதலிடத்திலும், 29 தினங்களுடன் பங்களாதேஷ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கமைய, 25 விடுமுறை தினங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையில் அதிக பொது விடுமுறை தினங்கள் காணப்படுவதற்கு ஒவ்வொரு பௌர்ணமி தினமும் பொது விடுமுறையாக அறிவிக்கப்படும் நடைமுறை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கம்போடியா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் ஆண்டுக்கு 20க்கும் மேற்பட்ட தேசிய பொது விடுமுறை தினங்கள் காணப்படுகின்றன.
மறுபுறம், சுவிட்சர்லாந்தில் தேசிய மட்டத்தில் ஒரேயொரு பொது விடுமுறை தினமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்நாட்டின் 26 மாநிலங்களும் தனித்தனியாக விடுமுறை தினங்களை அறிவிப்பதுடன், ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது எட்டு பொது விடுமுறை தினங்கள் காணப்படுகின்றன.
மேலும், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நான்கு தினங்களும், உருகுவேயில் ஐந்து தினங்களும் பதிவாகியுள்ளன. இவை ஆய்வில் குறைந்த எண்ணிக்கையிலான தேசிய பொது விடுமுறைகளைக் கொண்ட நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மட்டத்திலான பொது விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாநில அல்லது பிராந்திய மட்டத்திலான தனிப்பட்ட விடுமுறைகள் இதில் ஒரே விதமாகக் கணக்கிடப்படவில்லை.








