யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் T-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 96 தோட்டாக்களுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (22) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றை வழிமறித்துப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கிகளுக்கான 96 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணி மற்றும் தோட்டாக்கள் தொடர்பான மேலதிக தகவல்களைக் கண்டறியும் நோக்கில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







