கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற எண்ணெய்க் கசிவு சம்பவத்தினால் முத்துவெல்ல கடற்கரையை அண்மித்த 3 கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,000 தொன் கொள்ளளவைக் கொண்ட சேமிப்புத் தொட்டியிலிருந்து எண்ணெய் வெளியேறியதன் காரணமாக இந்த மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, குறித்த எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) அறிவித்துள்ளது.
எனினும், கசிந்த எண்ணெய் வடிகால் கால்வாயில் கலந்துள்ளதுடன், கடல் நீரையும் சென்றடைந்துள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய்ப் படிவங்களை அகற்றும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த எண்ணெய்க் கசிவினால் கடற்கரைச் சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைத்து, சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







